தமிழ்ச் சமுதாயம் பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகி மூடப்பழக்கங்கள் என்ற குழிகளில் விழுந்து விழுந்து நலிந்து கொண்டிருந்தது. அதனை அவ்வப்போது கரையேற்றும் முயற்சிகள் இருந்தன. எனினும், அக்குழிகளைத் தூர்த்துப் பகுத்தறிவு நெறியில் செலுத்தும் பணியைப் பெரியார் இராமசாமி ஏற்றார். தொடக்கத்தில் கல்லெறியும் சொல்லெறியும் அவர்க்குக் கிடைத்தன. இதோ அவர் உருவத்தைக் கவிஞர் வருணிப்பதைப் பாருங்கள்! தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்! (பெரியார்!: 16-19) ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று மக்களால் போற்றப் பெற்ற பெரியார் குழந்தை மணம், கட்டாய மணம், வைதிகச் சடங்குகள், சோதிடம் ஆகியவற்றைச் சாடினார். பாரதிதாசன் இந்த மூடப்பழக்கங்களைக் கவிதை மூலம் தாக்கிப் பலரை விழிப்புறச் செய்தார். இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவதென்றோ? உயர்வது என்றோ? (சஞ...